பசுபதீஸ்வரர் கோவில் திருவாமூர். அம்மன் பெயர் திரிபுரசுந்தரி. தலவிருட்சம் கொன்றை. இது கடலூர் மாவட்டத்திலே இருக்கின்றது. இந்தத் தலத்திற்காகத் தனியாகத் தேவாரப்பாடல் இல்லாவிட்டாலும், அப்பர் பாடிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவனைக் குறித்தே அருளப்பட்டதாகும்.
இத்தலத்தினுடைய பெருமையைப் பெரியபுராணத்திலே காணலாம். இந்த ஆலயம் மிகவும் பழமையானது.
சுவாமி சன்னிதிக்கு எதிரிலேயே அப்பருடைய திருஉருவம் நின்ற திருக்கோலத்திலே உள்ளது. உழவாரப்படை இடது தோளிலே இருக்கின்றது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைப் பாடியுள்ளார்.
அப்பருடைய அக்காவான திலகவதியாருக்குத் தனி சன்னிதி உள்ளது. அப்பருடைய தாயார் மாதினியார், தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. திருவாமூர் நாலாபுறமும் வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம் ஆகும். இந்தத் தலத்திலே பசுபதீஸ்வரரும், திரிபுரசுந்தரியும் அருள்பாலித்தாலும், இங்கே அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் ஊரிலே இறந்துவிட்டார். அதனால் திருமணம் நடக்கவில்லை. அன்றுமுதல், இவ்வூரில் திருமணத்திற்கு முதல் நாளோ அல்லது திருமணத்தன்றோதான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.
இங்கே நாவுக்கரசர் அவதாரம் செய்த ஒரு மரம் உள்ளது. அதைக் களரி வாகை அல்லது களர் உகாய் (உகாய் என்பது ஓகை மரம்) என்று சொல்கிறார்கள். அந்த மரத்திற்குப் பக்கத்திலேயே அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. சிறிய கோவில்.
இந்த மரம் ஒரு செடியாகவும் இல்லை, கொடியாகவும் இல்லை. பெரிய மரமாகவும் இல்லை, தழைத்திருக்கிறது. இதனுடைய இலையிலே இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற ஆறு சுவைகளையும் காணமுடிகிறது. இந்த மரம் 7-ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கின்றது என்று சொல்கிறார்கள். 3-ம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தார். 11-ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றதாகத் தெரிகிறது.
திருநாவுக்கரசருடைய நினைவாக இங்கே மூத்த இசைவாணர், திருமுறையிலே சிறந்த ஓதுவார் மூர்த்திக்கு, திருமுறை கலாநிதி என்றப் பட்டம் பொறித்த பொற்பதக்கமும், பொன்னாடையும், பொற்கிழியும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
அப்பர் சுவாமியினுடைய பரம்பரையினர் பக்கத்து ஊரிலே வாழ்ந்து வருகிறார்கள். சித்திரை சதய திருநாளும், பங்குனி மாத ரோகிணியும் சிறப்பாக இங்கே கொண்டாடப்படுகின்றன.
இந்த ஊரினுடைய PINCODE - 607106.
STDCODE - 04142.