பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர். அம்மன் பெயர் வேணுபுஜாம்பிகை, காம்பனையதோழி. தலவிருட்சம் சரக்கொன்றை. சூரியதீர்த்தம். பந்தணைநல்லூர் என்பது இப்போது பந்தநல்லூர் என்று வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிய பதிகங்கள் உள்ளன. சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தி. இது பாடல்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஊரினுடைய PINCODE – 609807.
நவக்கிரங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளன. பசுவின் பதியாக வந்ததால் சிவன் பசுபதீஸ்வரர் என்று பெயர் பெற்றுள்ளார். இங்கு பெருமாள், கன்வர், வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதருடைய திருப்புகழும் உள்ளது. இராமலிங்க அடிகளாரும், பட்டீஸ்வரம் மௌனகுரு சாமி ஆகியோரும் பாடியுள்ளார்கள்.
சிவனும், பார்வதியும் கைலாயத்திலே, ஒரு சமயத்திலே அமர்ந்திருந்தபோது, பார்வதிக்குப் பந்து விளையாட வேண்டும் என்ற ஆசை உண்டானது. சிவன் 4 வேதங்களையும், 4 பந்துகளாக மாற்றிப் பார்வதியிடம் கொடுத்தார். பார்வதி பந்து விளையாடிக்கொண்டேயிருந்ததால், சூரியன் மறையாமல் வெளிச்சம் தந்து கொண்டே இருக்கிறார். அதனால் இருட்டே இல்லாமல் போனது. மாலையில் செய்யவேண்டிய சந்தியாவந்தனம் முதலிய கடன்களைச் செய்யமுடியாமல் போனது.
சிவனிடம் சென்று எல்லாரும் முறையிட்டார்கள். சிவன் பார்வதியிடத்திலே செல்லும்போது, பார்வதி சிவன் வந்ததைக் கவனிக்கவில்லை. சிவன் பார்வதியைப் பசுவாக மாறுமாறு சாபம் கொடுக்கிறார். உடனே சிவன் ஒரு பந்தை எடுத்துக் காலால் எத்தினார். அது பூமியிலே ஒரு சரக்கொன்றை மரத்தின் அடியிலே விழுந்தது. இந்த சிவலிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
பந்து அணைந்த தலம் ஆதலால் பந்தணைநல்லூர் ஆனது. பார்வதியைக் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு இடையர் வடிவிலே ஒரு பசுவை அழைத்துக்கொண்டு வருகிறார். மாலையிலே கன்வமகரிஷி ஆசிரமத்திலே பால் கொடுத்துவந்தார். ஒருநாள் புற்றிலிருந்த ஒரு லிங்கத்தைப் பார்த்துப் பசு பால் சொரிந்து விடுகிறது. அதற்கு பிறகுதான் அந்த இடத்திலே ஒரு லிங்கம் இருப்பதை அறிந்தனர். பசுவை முனிவர் அடிக்கிறார். அப்போது பசு துள்ளிக்குதித்து அந்தப் புற்றிலே காலை வைக்கிறது. உடனே விஷ்ணுவும், பார்வதியும் சுயஉருவம் பெற்றுக் காட்சி அளிக்கிறார்கள்.
சாப நிவர்த்தி பெற்றவுடன் பார்வதி தன்னைத் திருமணம் செய்யவேண்டும் என்று சிவனிடம் வேண்டுகிறார். சிவன் நீ வடக்கு நோக்கித் தவமிருப்பாயாக, அதற்குப் பிறகு என்னை வந்து சேர் என்றார். அதன்படியே செய்து திருமணம் செய்து கொள்கிறார். சிவன் மூல ஸ்தானத்திலே கல்யாண சுந்தரராகக் காட்சி தருகிறார்.
சிவ சிவ.