ஊதியூர் - ஊதிமலை. இது கோயம்புதூர் மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. மூலவர் உத்தண்ட வேலாயுத ஸ்வாமி. கருவறையிலே தண்டத்தை ஏந்தி இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, வெற்றிவேலுடன், வேலாயுத ஸ்வாமி தரிசனம் தருகிறார்.
கொங்கு நாட்டிலே குமரப்பெருமான் கோவில் கொண்டுள்ள மலைகளிலே ஒன்று ஊதி மலை. கொங்குமண்டல சதகம் என்னும் நூலிலே மலையினுடைய பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன, அருணகிரிநாதர் இத்தலப் பெருமானைப் போற்றிப் பாடியிருக்கிறார்.
ஊதிமலை 156 படிகளைக் கொண்ட மலைக்கோவிலாகும். மலைக்கோவிலின் நுழைவுவாயில் தெற்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரத்தின் முன்பாக தீபஸ்தம்பம் அமைக்கபட்டு உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என 4 பகுதிகள் இருக்கின்றன. கொங்கணச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகன் விக்கிரஹம் இங்கு இருகின்றது. படையெடுப்பின் காரணமாக அது பின்னமடைந்து விட்டாலும், அதனை மஹாமண்டபத்தில் வைத்து இன்றும் பூஜித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலே, சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவருடைய சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் மக்களின் குறைகளைத் தங்களின் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்தார்கள்.
ஒருசமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையையும், நோயையும் போக்கும் விதமாக, மூலிகைகளைக் கொண்ட இம்மலைக்குத் தீ வைத்துப் புகைமூட்டி ஊதினார்கள். அப்போது முருகபெருமான் அங்கு எழுந்தருளி மக்களினுடைய குறைகளைத் தீர்த்தார். புகைமூட்டி ஊதியதால் ஊதிமலை எனப்பட்டது.
கொங்கணச்சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதிப் பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும், கொங்கணகிரி என்றும் இதற்குப் பெயர். இராமாயணத்திலே ராம, லட்சுமணர்கள் மூர்ச்சையான போது, அனுமான் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றார். சஞ்சீவி மலையினுடைய ஒரு பகுதி கீழே விழுந்து, இந்த மலையாக ஆனது என்றும் அழைக்கப்படுவதால் இதற்கு சஞ்சீவி மலை என்றும் ஒரு பெயர் உண்டு.
இன்றைய தேதியிலும் சித்தர்கள் இரவு நேரங்களிலே இங்கே வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை. முருகன் கோவிலுக்கு, மலைக்கு மேலே சென்றால் கொங்கணச்சித்தர் ஆலயம் அமைந்துள்ளது. 3 கி.மீ வேலாயுத ஸ்வாமி கோவிலிலிருந்து மலையின் மீது ஏறிச்செல்ல வேண்டும். இங்கே கொங்கணர் ஆலயம் அமைந்திருக்கின்றது. கொங்கணச்சித்தர் சந்திரகாந்த கல் மீது தவம் செய்யும் கோலத்திலே அமர்ந்திருக்கின்றார். இதிலிருந்து 200 அடி தூரத்திலே கொங்கணர் தவம் செய்த குகை ஒன்றும் உள்ளது.
இந்தக் குகையிலிருந்து பழனி மலைக்குச் சுரங்கம் உள்ளதாகவும் நம்பிக்கை. கொங்கணச் சித்தரினுடைய சிஷ்யரான தம்புரான்செட்டி கோவிலும் இங்கு அமைந்துள்ளது. அவருடைய ஜீவ சமாதியும், அவர் தவம் செய்த குகையும் இங்கு இருக்கின்றது.
மலைக்கு மேலே இன்னும் சென்றால், கடல்மட்டத்திலிருந்து 1080 மீ உயரத்திலே, உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளது.
அதற்கும் மேலே சென்றால் சொர்ணலிங்கேஸ்வரர் மலையினுடைய உச்சியிலே, சிவபெருமான் சித்தருக்குக் காட்சித் தந்த இடம், சிவலிங்கம் ஆகியவை உள்ளன. இதிலே ஏறுவது மிகவும் கடினமானது.
வெள்ளியங்கிரி மலையைப் போலவே 7 குன்றுகளையும், 3 பாறைகளுக்கு மத்தியில் சிவன் காட்சி தருவதாகவும் அமைந்திருக்கின்றது. இதற்குச் சின்ன வெள்ளியங்கிரி என்றும் பெயர் உண்டு.
பௌர்ணமியிலே மலைப் பாறைகளில் சந்திரகாந்தக் கல்லினுடைய படிமங்கள் பிரதிபலிக்கும். இதனால் அதனுடைய சக்தியினாலே அனைத்து நோய்களும் நீங்கும் என்ற ஐதீகத்தினால், பக்தர்கள் இன்றும் பாறைகளில் பௌர்ணமி அன்று படுத்திருப்பர்.
இந்த மலையிலேயிருந்து கொண்டு வரப்பட்ட இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைக் கஷாயமும் வழங்கப்படுகிறது.
இந்த ஊரினுடைய STD CODE 04257.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.