ஓமாம்புலியூர் அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில். துயர் தீர்த்த நாதர். அம்மன் பெயர் பூங்கொடி நாயகி, புஷ்பலதாம்பிகை. தலவிருட்சம் இலந்தை. தீர்த்தம் கொள்ளிடம், கௌரி. உமாப்புலியூர் என்றும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளார்கள். சுயம்பு லிங்கம். குரு ஸ்தலம். ஊரினுடைய PINCODE – 608306.
இந்த ஊரிலே எப்போதும் ஹோமங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாக அப்பர் கூறுகிறார். உமாதேவியினுடைய அருள்பெற்ற ஸ்தலம் என்பதால், உமாப்புலியூர் என்பது ஓமாப்புலியூர் என்று மாறிவிட்டதாக ஒரு தகவலும் உண்டு. உமாதேவியார் இங்கு வந்து தவமிருந்து, சிவனிடமிருந்து பிரணவ மந்திர உபதேசம் பெற்றார்.
சிவனே அம்பிகைக்குக் குருவாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. ஆதி குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலே இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்கு சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மஹாமண்டபத்தில் தக்ஷிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
தில்லையிலே நடராஜருடைய நடனத்தைக் காண்பதற்கு முன்பாக, வியாக்ரபாத முனிவர், புலிக்கால் முனிவர் ஓமாம்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜருடைய நடனத்தைக் காண அருளவேண்டும் என்று வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப் பட்டதால், இந்த ஊர் இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோவிலிலே 6 கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழமன்னரில் 3-ம் குலோத்துங்க சோழன், பல்லவரில் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவர் ஆகியோரின் கல்வெட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கல்வெட்டுகளிலே இந்தக் கோவில் வடதளி உடையார் என்று சொல்கிறார்கள். தளி என்றால் கோவில்.
வேடன் ஒருவன் ஒரு புலிக்கு பயந்து வந்து, இக்கோவிலினுடைய வில்வ மரத்திலே ஏறிக்கொண்டான். அப்புலியும் மரத்தை விட்டுப் போகாமல் அங்கேயே இருந்தது. இரவிலே வேடன் வில்வ இலைகளைப் பறித்து எடுத்து, அந்தப் புலியின் மேலே போட்டான். அந்த இலைகள் அந்த மரத்தின் அடியே இருக்கின்ற இறைவன் மீதும் விழ, இறைவன் மறுநாள் காலையிலே வேடனுக்கு முக்தி அளித்தார். அதன் காரணமாகவே இந்த ஓமாம்-புலி-ஊர் என்ற பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
திருச்சிற்றம்பலம்.