அருள்மிகு நீலகண்டேஸ்வரர் கோவில். எருக்கத்தம்புலியூர். பாடல் பெற்ற ஸ்தலம். மூலவர் திருக்குமாரசுவாமி, ஸ்வேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர். அம்மனுடைய பெயர் வீறாமுளையம்மன், அபின்னகுசநாயகி, அபீதகுசநாயகி, நீலோற்பலாம்பிகை, நீலமலர்க்கண்ணியார். ஸ்தல விருட்சம் வெள்ளெருக்கு. தீர்த்தம் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், ஸ்வேதம். இதனுடைய பழைய பெயர்கள் எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம். இப்பொழுது ராஜேந்திரப்பட்டினம் என்று வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்திலே உள்ளது. சம்பந்தர் தேவாரப்பதிகம் உள்ளது.
இங்கு மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரையில் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. திருநீலகண்டநாயனார் அவதரித்தத் தலம் ஆகும். இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக இருக்கிறார்.
இந்தத் தலத்தினுடைய பெருமையைக் கேட்ட தேவர், முனிவர்களெல்லாம் இங்கு பறவைகளாகவும், மரங்களாகவும் மாறி வழிபட்டார்கள். வேடர்கள் இந்தப் பறவைகளைக் கொல்லவும், மரங்களை வெட்டவும் ஆரம்பித்தபோது, இறைவன் எல்லோரும் வெள்ளெருக்காக மாறி வழிபடுங்கள் என்று கூறி மறைந்தார். அதனால் எருக்கத்தம்புலியூர் என்றானது.
ராஜராஜசோழன் புத்திரன் வேண்டி இந்தத் தலத்து ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திரசோழன் பிறந்தான் என்பதால்தான் இந்த ஊருக்கு ராஜேந்திரப்பட்டினம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கதை உண்டு. ஸ்வேதன் என்ற அரசனுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டது. இந்தத் தலத்திலே நீராடியபிறகு நோய் நீங்கப்பெற்றான்.
புராணக்கதை: கைலாயத்திலே ஒருபொழுது, சிவன் வேதாகமத்தை பார்வதிக்கு சொல்லிக் கொண்டிருந்தார். பார்வதி சரியாக அதைக் கவனிக்கவில்லை. சிவபெருமான் பார்வதியைப் பூமியில் சென்று பிறக்குமாறு சபித்தார். அதைக்கண்டு கோபமுற்ற முருகன், தன் தாயை சபித்ததற்காக வேதாகம நூல்களைக் கடலிலே தூக்கி வீசிவிட்டார். உடனே சிவன் முருகனை ஊமைப் பிள்ளையாகப் போகும்படி சபித்து விட்டார்.
முருகன் மதுரையிலே கணபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு, உருத்திரசன்மர் என்ற பெயரிலே அவதரித்தார். எருக்கத்தம்புலியூரிலே வந்து சிவலிங்கத்தை வழிபட்டபோது, முருகனுக்குப் பேசும் திறமை கிடைத்தது. அதனால், குமாரசுவாமி என்று இந்த சிவன் அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோவிலிலே திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய திரு உருவம் மதங்க சூளாமணியாருடன் இருக்கின்றது. தட்சிணாமூர்த்திக்கு மேலே, சிறிய கோவில் அமைப்பிலே சீர்காழி சட்டைநாதர் தரிசனம் தருகிறார்.
இது விருத்தாச்சலம்-ஜெயங்கொண்டம் பேருந்து வழியிலே அமைந்திருக்கின்றது.
இந்த ஊரினுடைய PINCODE – 608703.
STD CODE – 04143.
சிவ சிவ.