அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல்
மூலவர்: ஆஞ்சநேயர்
ஊர்: நாமக்கல்
மாவட்டம்: நாமக்கல்
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் காட்சி தருகிறார்.
நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடியபோது ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாகக் கருதப்படும் கல்) அவருக்குக் கிடைத்தது. பூஜைக்காக அதை எடுத்துக்கொண்டு பறந்து வந்தார். நீராடுவதற்காக இவ்வூரில் இறங்கினார். சாளக்ராமத்தை கீழே வைக்கக் கூடாது என்பதால், கமல தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார் தவம் செய்வதைக் கண்டார். தாயாரின் தவத்திற்கான காரணம் என்ன என்று கேட்டார். திருமாலுடைய நரசிம்ம வடிவத்தைத் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைப் பார்க்கத்தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர் தாயாரிடம் சாளக்ராமத்தைக் கொடுத்து நீராடிவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றார். சீக்கிரம் வராவிட்டால் சாளக்ராமத்தைக் கீழே தரையில் வைத்துவிடுவேன் என தாயார் சொல்லியிருந்தார். ஆஞ்சநேயருக்குத் திரும்பி வரத் தாமதமாகி விட்டது. தாயார் சாளக்ராமத்தைக் கீழே வைத்து விட்டாள். ஆஞ்சநேயரால் சாளக்ராமத்தை எடுக்க முடியவில்லை. அது பெரிய மலையாக மாறி விட்டது. அதில் நரசிம்மர் தோன்றித் தாயாருக்குக் காட்சி கொடுத்தார். ஆஞ்சநேயரும் இந்த ஊரிலேயே தங்கி விட்டார்.
பங்குனியில் 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். இந்த ஒருநாள் மட்டும்தான் சுவாமி தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்கலாம். மறுநாள் தேர்த்திருவிழா.
குடைவரை நரசிம்மர் ஒரு குடைவரை சிற்பமாக உள்ளார். கூர்மையான நகங்களுடன் இருக்கும் இவர், உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருகிறார். நரசிம்மர் குடவரை மூர்த்தி என்பதால் திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது. தாயார் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் வாசம் செய்கிறார். நாமகிரி தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறார்.
ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடனாக வடை மாலை, துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு சாத்துவதைக் காணலாம்.
ஆஞ்சனேயர் பக்தி, அடக்கம், ஞானம் இவற்றின் உருவம். இவரை வணங்கினால் கல்வி, பக்தி, வினயம் எல்லாம் நம்மை வந்து சேரும்.
நாமக்கல் 637403.