அம்மன்: அருள்மிகு மூகாம்பிகை
ஊர்: கொல்லூர்
மாவட்டம்: உடுப்பி, குந்தாப்பூர் தாலுகா
மாநிலம்: கர்நாடகா
தீர்த்தம்: அக்னி, காசி, சுக்கில, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு தீர்த்தங்கள்
ஆதிசங்கரர் இங்கு வந்தபோது கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இங்கே இருந்தது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் என்று பெயர் பெற்றது. லிங்கத்தில் அம்பாள் அருவமாக அருள்பொழிவதை உணர்ந்த அவர், தியானம் செய்த போது, அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்குக் காட்சி கொடுத்தாள். அதை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது; அலங்காரம் புஷ்பாஞ்சலி மட்டுமே நடக்கும்.
இங்கு மூகாசுரன் என்னும் அசுரன் சிவனை நோக்கித் தவமிருந்தான், அவன் தவப்பயனை அடைந்தால் உலகிற்குத் துன்பம் ஏற்படும். தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டார்கள். அம்பிகை அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே அவனது பெயரிலேயே மூகாம்பிகை என்ற பெயரில் தங்கினாள் அம்பாள்.
லிங்கத்தின் நடுவிலே ஒரு தங்கக் கோடு உள்ளது. இந்தத் தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். பிரம்மா விஷ்ணு சிவன் சரஸ்வதி லட்சுமி பார்வதி ஆகியோர் லிங்கத்தில் அருள்பாலிப்பதாக நம்பிக்கை. இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன். இங்கு பூஜை செய்யப் பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம்.
மங்களூரிலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள கொல்லூருக்கு பஸ் வசதி அதிகம் உள்ளது. பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம்; மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா; தீபாவளி விழா; ஆனி மாதத்தில் அன்னையின் ஜெயந்தி;ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை; புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி; மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன இங்கே சிறப்பு.
சரஸ்வதி பூஜையன்று, மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி, பவனி வருகிறாள். மூகாம்பிகை சரஸ்வதி அம்சம் என்பதால், கல்வியில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்வது சிறப்பு.
அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், கைகளில் சங்கு சக்கரத்துடன், காளி-மகாலட்சுமி-சரஸ்வதி ஆகிய 3 தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஆதிசங்கரர் கலா ரோகணம் பாடி அருள் பெற்றார். ஆதிசங்கரர் மூகாம்பிகை மேல் தவம் புரிந்து எழ முயன்றார்; அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்துக் கொடுத்தாள். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் சவுந்தர்ய லஹரி ஸ்லோகம் எழுதினார்.
கொல்லூர்: 576220