அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்
மூலவர்: சண்முகநாதர்
அம்மன்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: அரசமரம்
தீர்த்தம்: தேனாறு
புராணப் பெயர்: அரசவனம்
குன்றக்குடி காரைக்குடியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கண்ணபிரான், பிரம்மா, இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது ஆகும்.
சூரன் மயிலிடம் நான்முகனின் அன்னமும், திருமாலின் கருடனும் நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னான். மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும் கருடனையும் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும் கருடனையும் மீட்டுத் தந்தார். செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போவாய் என்று சாபம் தந்தார். மயில் குன்றக்குடிக்கு வந்து முருகப்பெருமானை நோக்கித் தவம் இருந்தது. முருகன் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார்.
முருகனது வாகனமாகிய மயில், மயிலுருவ மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவில் இருப்பதாகக் கூறுகிறார்கர். உயரம் 40 மீட்டர். ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டர். சண்முகநாதன், செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்மலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் இம்முருகனுக்கு உண்டு. அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழ்ந்ததற்கான கற்படுக்கைகள், கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலில் குடவரைக்கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன. இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றது இத்திருத்தலம்.
பங்குனி உத்திரம் 10 நாள், தைப்பூசம் 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள். சித்திரை - பால்பெருக்கு விழா, வைகாசி - விசாகப் பெருவிழா, ஆனி - மகாபிஷேகம், ஆடி - திருப்படிபூஜை, ஆவணி ஆவணி மூலம் பிட்டுத் திருவிழா, புரட்டாசி - அம்புபோடும் திருவிழா, ஐப்பசி - கந்த சஷ்டி திருவிழா ஆகியவை சிறப்பு.
குன்றக்குடி 630 206.