மூலவர்: அருள்மிகு முருகன்
புராண பெயர்: கச்சி
ஊர்: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருள அறியாத பிரமனை முருகன் சிறையில் அடைத்தார். பிறகு பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலைத் தானே ஆரம்பித்தார். அந்தப் படைப்பை இந்தத் தலத்தில் நடத்தியதாக நம்பிக்கை. பிரமனை விடுவிக்க ஈசன், முருகனிடம் நந்தி தேவரை அனுப்பியும், முருகன் அதைச் செய்யவில்லை. இறைவனே நேரில் சென்றபின் பிரமனை விடுவிக்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்காகப் பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார் முருகன். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது. இந்த முருகனைத் தரிசித்தால் பிரம்மா விஷ்ணு சிவனை தரிசித்த பலன். காஞ்சிபுரம் ராஜ வீதியில் ஊரின் நடுவே இத்தலம் அமைந்துள்ளது.
இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகமும், வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கின்றன. முருகன் தலங்களில் இது முக்தி தலம். கந்தசஷ்டி திருவிழா, வைகாசி விசாகப் பெருவிழா, திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு.
நாக வழிபாடு நமது பண்பாட்டில் மிகவும் தொன்மையானது. இத்தல முருகனைக் குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் என அழைக்கிறார்கள். கந்தபுராணம் இத்தலத்தில் தான் அரங்கேறியது. குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
புராணங்களுள் மிகவும் புகழுடையது, பெரியது கந்த புராணம். முருகனே திகட சக்கரம் என அடியெடுத்துக் கொடுத்து, கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு கந்தபுராணம் எழுதச் செய்தான். கந்தபுராணம் அரங்கேறிய போது ஏற்பட்ட ஐயத்தையும் முருகனே வந்து தீர்த்து வைத்தான். கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. இத்தலத்திற்கு அருணகிரி நாதரின் திருப்புகழும் உள்ளது. பாம்பன் சுவாமிகள் குமரக்கோட்டத்திற்கு வழி தெரியாமல் இருந்த போது, முருகனே சிறுவன் வடிவில் வந்து வழிகாட்டி அழைத்து வந்து தரிசனம் அளித்த தலம்.
காஞ்சிபுரம் - 631502.