குமாரவயலூர் சுப்ரமண்யசுவாமி, ஆதிநாதர், அக்னீஸ்வரர். வள்ளி, தேவசேனா ஆதிநாயகி. வன்னிமரம், சக்தி தீர்த்தம். ஆதிவயலூர் என்பது புராணப்பெயர், குமாரவயலூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்திலே உள்ளது.
முருகப்பெருமானே தன்னுடைய வேலினால் கீறி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது. சோழர் காலத்துக் கோவிலாகும்.
அருணகிரிநாதர் திருவண்ணாமலையிலே பாடுவதற்காக முருகப்பெருமானே முத்தைத்தரு என்று அடி எடுத்துக் கொடுத்தார். அதற்குப் பிறகு அருணகிரிநாதர் வேறு எந்தப் பாடலும் பாடவில்லை. ஒருநாள் முருகனைத் தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது வயலூருக்கு வா என்று அசரீரி ஒலித்தது. அதற்கேற்றாற் போல் வயலூருக்கு வந்தபிறகு முருகன் காட்சி தரவில்லையே என்று ஏங்கினார்.
அப்பொழுது பொய்யாக் கணபதி, இந்த அசரீரி உண்மையே என்று கூறி, அங்கிருந்த சுப்ரமண்ய சுவாமியின் இருப்பிடத்தைக் காட்டினார்.
முருகனும் தன்னுடைய வேலால் அருணகிரி நாதருடைய நாக்கிலே ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன் பிறகுதான் அருணகிரிநாதர் முழுமையாகத் திருப்புகழ் பாடத் தொடங்கினார்.
திருப்புகழ் நமக்குக் கிடைத்ததற்கு இந்த முருகனே காரணம் ஆவார். இது சிவத்தலம் என்றாலும் சுப்ரமண்யசுவாமி விஷேசமாக வணங்கப்படுகிறார். மணக்கோலத்தில் இருப்பதால் குமாரவயலூர் என்று அழைக்கப்படுகிறது.
தைப்பூசமன்று 4 கோவில் சாமிகளுடன் முருகன் சேர்ந்து பஞ்சமூர்த்திகளாகக் காட்சி தருவார்.
வழக்கமாக ஒரு பாதத்தைத் தூக்கி நடனமாடும் நடராஜப் பெருமான், இங்குக் காலைத் தூக்காத கோலத்திலே இருக்கிறார். இது நடனமாடுவதற்கு முற்பட்ட நிலையாகும். இதனால் சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே உள்ளது. காலுக்குக் கீழே முயலகனும் இல்லை. இவர் சதுர தாணடவ நடராஜர் என்று அழைக்கப்படுகின்றார். நடராஜர் சூரத்தாண்டவமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
அருணகிரிநாதருக்குக் காட்சி கொடுத்த பொய்யாக் கணபதி விஷேசமானவர் ஆவார். திருப்புகழிலே இவருக்குக் காப்புச் செய்யுள் உள்ளது.
சிவனுக்குரிய வன்னிமரம் இந்தத் தலத்தினுடைய விருட்சமாகும். நாகதோஷம் உள்ளவர்களும் இங்கு தரிசிக்கிறார்கள். நோய் தீரவேண்டியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், சஷ்டி வேள்வி, சண்முக வேள்வி, அங்கப்பிரதக்ஷணம் செய்தும் நிறைய நேர்த்திக் கடன்களைப் பக்தர்கள் செய்கிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை முருகப்பெருமான் தினமும் பூஜை செய்யும் முறையினாலே, சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் காலில் விழுந்து பூஜை செய்யும் பாலகனாகக் காட்சி தருகிறார்.
வாரியார் சுவாமிகள் இந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்வதற்காக நிறைய உதவிகள் செய்துள்ளார். மூலஸ்தானத்தினுடைய மயில் வடக்குப் பார்த்து இருக்கின்றது. இதற்குத் தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி மற்ற தலங்களிலே வடக்கு முகமாக பார்த்திருப்பாள். இங்கு தெற்கு முகமாகப் பார்த்திருப்பது விஷேசமாகும். சில தலங்களிலே முருகப்பெருமான் தாய் தந்தையரைத் தனியாகப் பூஜை செய்வார். ஆனால் வயலூரிலே வள்ளியோடும், தெய்வகுஞ்சரியோடும் சேர்ந்து பூஜை செய்கின்ற சிறப்பு உள்ளது.
ஒருகாலத்திலே வேட்டையாட வந்த சோழமன்னனுடைய தண்ணீர் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள நீருக்காக அலைந்தான். அப்போது இந்த கோவில் இருக்கும் இடத்திற்குப் பக்கத்திலே கரும்பு ஒன்று 3 கிளைகளாக இருந்தது. அதை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அந்த இடத்தைத் தோண்டிய போது சிவலிங்கம் இருந்ததாகவும், பிறகு சிவன் கோவில் எழுப்பியதாகவும் செவிவிழிச் செய்தி உள்ளது.
PINCODE – 620102.
STD CODE – 0431.
ஓம் முருகா.