அருள்மிகு பெரியநாயகி - அருள்மிகு கோணேசுவரர்
தலமரம்: வாழை
குளம்: காவிரி, அமிர்த தீர்த்தம்
திருணபிந்து முனிவருக்குச் சிவபெருமான் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குட்டநோயினைத் தீர்த்தருளியதால் குட+வாயில் என்ற பெயரைப் பெற்றது.
ஊர் குடவாயில் என்றும், கோயில் குடவாயிற்கோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன. பிரளயம் வந்தபோது அனைத்து உயிர்களும் அழிந்துவிடக் கூடாது என்று சிவன் குடம் ஒன்றைச் செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து, குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து கொண்டு பாதுகாத்தார். சிவலிங்கத்தைப் புற்று மூடியது. அந்தப் புற்று வளர்ந்து மலை போல் ஆனது. புற்றால் மூடப்பட்டிருந்த குடத்தைக் கருடன் மூக்கினால் கொத்திப் பிளந்தார்; சிவலிங்கம் வெளிப்பட்டது. அதனால் இந்த இறைவனை வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கிறார்கள். அமுத நீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆகும். ஈசனால் பாதுகாக்கப்பட்ட அந்த அமிர்த கலசம், பாண்புரீசுவரரின் அம்பால் மூன்றாக உடைந்தது. அடிப்பாகம் விழுந்த இடம் கும்பகோணம்; நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர் (இன்றைய சாக்கோட்டை); குடத்தின் முகப்பு அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில் (குடவாசல்) ஆனது.
திருணபிந்து முனிவர் பூசித்து முத்தி பெற்றார். கருடன் பூசித்து அமுதத்தை பெற்றுத் தானும் தன்தாயும் சாபம் நீங்கிய தலம். கோயில் மதிலின்மேல் கருடன் உருவங்கள் உள்ளன. இத்தலத்தை ஞானசம்பந்தர் 2 பதிகங்களில் பாடியுள்ளார்.
இங்குள்ள கோயில் மாடக் கோயில் அமைப்பு உடையது. கோச்செங்கணான் இக்கோயிலை மாடக்கோயிலாக அமைத்தான். அம்மன் கோயில் நில மட்டத்தில் உள்ளது. கோயிலின் மதில் மண்டபம் கருடன் வடிவில் இருக்கிறதென்று கூறுவார்கள்.
கும்பகோணத்திலிருந்து 15.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. கொரடாச்சேரியில் இருந்து 9.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலமாகும். திருவாரூர், கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.
இவ்வூரில் நல்லாதனார், கீரத்தனார் என்ற இரு சங்கப்புலவர்கள் வாழ்ந்தனர். நல்லாதனார் திரிகடுகம் பாடிய புலவர். கணைக்கால் இரும்பொறை என்ற சேரன், சோழன் செங்கண்ணானோடு போர்செய்து குடவாயில் கோட்டத்தில் சிறையில் அடைபட்டுக் கிடந்த செய்தி உள்ளது. வீரன் ஒருவன் தண்ணீர் தர மறுத்ததால், உயிர்துறந்த இரும்பொறையின் மானம் சிறப்புடன் மதிக்கப்படுகிறது.
PIN Code: 612601
STD Code: 04365
SEO tags: kodavasal, thiruvarur, koneswarar, kudavasal