62ஆவது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம்
1746 – 1783
ஸ்ரீ ஸ்வாமிகள்1746 ஆம் ஆண்டு குரோதன வருஷம் பீடாதிபத்யம் ஏற்றார்கள். 1746ஆம் ஆண்டே திருவொற்றியூரிலிருந்து யாத்ரை செய்து தஞ்சாவூர், உடையார்பாளையம் ஆகிய ஊர்களில் சிலகாலம் தங்கி, 1747ல் கும்பகோணம் விஜயம் செய்தார்கள்.
1758ஆம் ஆண்டு ஈஸ்வர வருஷம் புரட்டாசி மாதம் 22ஆம் நாள் திருவானைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கப் பிரதிஷ்டை செய்துள்ளார். ஸ்ரீ ஆதிசங்கரர் காலம் முதல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் தாடங்கம் பழுது ஏற்பட்ட காலத்தில் எல்லாம் பழுது நீக்கிச் சாற்றும் உரிமை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்யர்களுக்கு மட்டுமே உரிமையானது.
ஸ்ரீ பெரியவர்கள் திருவனந்தபுரம், இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை முதலான இடங்களுக்குப் பயணம் செய்து சிஷ்யர்களுக்கு அருள் பாலித்துள்ளார்கள். இவர்கள் 1783ஆம் ஆண்டு சுபக்ருது வருஷம் புஷ்ய க்ருஷ்ண துவிதையில் கும்பகோணத்தில் சித்தியுற்றார்கள்.
63ஆவது பீடாதிபதி ஸ்ரீமஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம் 1783 – 1813
ஸ்ரீஸ்வாமிகள் 1783ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் பீடாதிபத்யம் ஏற்றார்கள். கர்நாடக அந்தண மரபினரான இவர்கள் கும்பகோணத்திலேயே அவதரித்தவர்கள். சிவகங்கை மன்னரான பெரிய உடையாத் தேவர் புலவச்சேரி என்னும் கிராமத்தை ஸ்ரீஸ்வாமிகளுக்குதான சாஸனமாக அளித்துள்ளார்.
ஸ்ரீஸ்வாமிகள் தென்னகம் முழுதும் யாத்ரை செய்துள்ளார்கள். ஸ்ரீஸ்வாமிகள் கும்பேஸ்வரர் திருக்கோயில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்திக்கு 1800ஆம் ஆண்டில் அர்த்த மண்டபத்தையும் மஹாமண்டபத்தையும் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.
தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோஜி ஸ்ரீஆசார்யாளுக்கு 1801ஆம் ஆண்டு கும்பகோணத்தில் கனகாபிஷேகம் செய்வித்தார். ஸ்ரீஸ்வாமிகள் ஆஷாட மாதம் சுக்லபக்ஷ துவாதசியில் (22-7-1813) கும்பகோணத்தில் சித்தியுற்றார்.
64ஆவது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம்
1813 – 1850
ஸ்ரீஸ்வாமிகள் கும்பகோணத்தில் ஸ்ரீசங்கர மடத்தை ஒட்டியுள்ள இல்லத்தில் அவதரித்தார். தஞ்சை நாயக்க மன்னரின் அமைச்சரான ஸ்ரீகோவிந்த தீக்ஷிதரின் மூன்றாவது குமாரரான வெங்கடேஸ்வர மகிபதி பரபினர். இவர்கள் 1813ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் ஸ்ரீமடத்தில் பீடாதிபதி ஆனார்கள். இவர்கள் காலத்தில்தான் 1820ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜா கர்ப்பக்ரஹம் சரபோஜி மன்னரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
ஸ்ரீஸ்வாமிகளால் காஞ்சிபுரம் ஸ்ரீகமாக்ஷி அம்மனுக்கு 22-1-1840ல் கும்பாபிஷேகம் சிறப்புற நடத்தி வைக்கப்பட்டது. 1816ல் திருவானைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் தாடங்கங்களை ஸ்ரீஸ்வாமிகள் ப்ரதிஷ்டை செய்து வைத்தார்கள். தஞ்சை மன்னர்கள் ஸ்ரீஸ்வாமிகளுக்கு 3 முறை கனகாபிஷேகம் செய்வித்துள்ளார்கள். 3ஆவது முறை செய்யப்பட்ட கனகாபிஷேகத்தின் பொருள்கொண்டு ஸ்ரீமடத்தின் நிரந்தர வருவாய்க்காக கருப்பூர் என்னும் கிராமத்தில் இவர்கள் காலத்தில்தான் சுமார் 250 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
சிவாஷ்டபதி என்னும் நூலை ஸ்வாமிகள் இயற்றியுள்ளார்கள். இவர்கள் 1850ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் க்ருஷ்ணபக்ஷ த்விதியை நாளில் சித்தியுற்றார். இவர்கள் ப்ருந்தாவனத்தை வடகோடி ப்ருந்தாவனம் என்றழைப்பர்.
68ஆவது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீ மஹாஸ்வாமிகள் 1907ஆம் ஆண்டு பராபவ வருஷம் மாசி மாதம் 2ஆம் நாள் (13-02-1907) புதன் கிழமையன்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக அமர்ந்தார்கள். ஸ்ரீமஹாஸ்வாமிகளுக்கு பிலவங்க வருஷம் சித்திரை 27ஆம் நாள் 9-5-1907 முறைப்படி கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 275 ஆண்டுகளுக்கு முன் 1747 ஸ்ரீ காமகோடி பீடத்தின் 62ஆவது ஆசார்யர்களான ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி(4) ஸ்வாமிகள் காலத்தில் காஞ்சிபுரம் ஆற்காடு பகுதியில் நடைபெற்ற யுத்தத்தின் விளைவாகப் பாதுகாப்பற்ற சூழ்நிலையின் காரணமாக, ஸ்ரீமடத்தின் வாஸஸ்தலம் காஞ்சியிலிருந்து கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது. அக்காலத்தில் தஞ்சையை ஆண்டுவந்த மராட்டிய மன்னரான ப்ரதாப சிம்மனின் அமைச்சராக இருந்த டபீர்பந்த் கும்பகோணத்தில் காவிரியின் தென் கரையில் ஸ்ரீமடத்தையும் நான்கு அக்ரஹாரங்களையும் அமைத்துக் கொடுத்தார்.
ஸ்ரீமடத்தின் 64ஆவது ஆசார்யாள் காலத்தில் தஞ்சையை ஆண்டுவந்த 2ஆம் சரபோஜி மன்னன் 1820ஆம் ஆண்டு ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜைக்காக விமானத்துடன் கூடிய கர்ப்பக்ரஹத்தையும் அதனைச்சுற்றி மண்டபங்களையும் அமைத்துக் கொடுத்தார். இதனை விளக்கும் கல்வெட்டு அந்த கர்ப்பக்ரஹத்தின் முன் சுவரில் காணப்படுகிறது.
ஸ்ரீமஹாஸ்வாமிகள் 1925ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீமடத்தின் திருப்பணிகளைத் துவக்கி வைத்தார்கள். தேப்பெருமா நல்லூர் ஸ்ரீ அன்னதான சிவனின் மேற்பார்வையில் அக்கால ஸ்ரீமடம் ஏஜெண்ட் ஸ்ரீ கே குப்புசாமி ஐயர் அவர்களின் முயற்சியில் ஒரு பகுதி கருங்கல் கட்டிடமாகக் கட்டப்பட்டது. இத்திருப்பணி 1933ஆம் ஆண்டு நிறைவுற்றது.
வெளி மண்டபம், உக்கிராணக் கட்டு, ஸ்வாமிகள் தனிமையில் தங்கியிருக்கும் இடங்கள் இவைகளின் திருப்பணிகளைக் கும்பகோணம் டாக்டர் மஹாலிங்க ஐயரின் தந்தையும் முன்னாள் வட்டாட்சியருமான இராமமூர்த்தி ஐயரும் கும்பகோணம் டபீர் நடுத்தெரு டிப்டி கலெக்டர் கிருஷ்ணசாமி ஐயரின் புதல்வர் கோபாலய்யரும் பொறுப்பேற்றுச் செய்து முடித்தார்கள்.
கும்பகோணத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வ்யாஸ பூஜை, சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்த வருடங்கள்:
1907 - பிலவங்க
1909 - சௌம்ய
1910 - சாதாரண
1914 - ஆனந்த
1915 - ராக்ஷஸ
1916 - நள
1917 - பிங்கள
1918 - காளயுக்தி
1939 - ப்ரமாதி
1946 - விய .
Source: https://www.kanchimatamkudanthai.org/history