கோழம்பம். கோகிலேஸ்வரர் திருக்கோவில். இறைவன் கோகிலேஸ்வரர், கோழம்பநாதர். அம்மன் சௌந்தர நாயகி. தலவிருட்சம் வில்வம், முல்லைக் கொடி. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இப்பொழுது குளம்பியம் என்று வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன.
காவிரி தென்கரைத் தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக இருக்கின்றார்.
பார்வதி பசுவாக இருந்து இந்த இடத்திலே சிவபெருமானைப் பூஜித்தார். பசுவினுடைய கால் குளம்பு ஆவுடையாரினுடைய மேல்பகுதியில் காணப்படுகிறது. அதனால்தான் இதற்கு குளம்பியம் என்று தற்காலத்திலே பெயர்.
PINCODE - 612 205.
இந்தக் கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோவிலாகும். இந்தத் தலத்தைச் சுற்றி அதிக ஷேத்திரங்கள் இருக்கின்றன.
சிவனும், பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்துக்கொண்டு சொக்கட்டான் ஆடினார்கள். ஆட்டத்தில் காய் உருட்டியபோது, சந்தேகம் வர, பார்வதியைக் கேட்கிறார் சிவன். பார்வதி, திருமாலுக்குச் சாதகனமான பதிலைக் கூறி விட்டதால், பூமியிலே போய்ப் பசுவாகப் பிறக்கும்படி சிவன் சாபம் கொடுக்கிறார். இந்தத் தலத்திற்கு வந்து பார்வதி சிவபெருமானைப் பூஜித்து, மீண்டும் சிவனைச் சேர்ந்ததாக ஸ்தல புராணம் சொல்கிறது.
சந்தன் என்பவன் தேவேந்திரனுடைய சாபத்தினால் குயிலாக மாறிவிட்டான். சாபம் நீங்குவதற்காக இந்தத் தலத்திலே வந்து பூஜித்தான். குயில் வடிவத்துடன் வந்து பக்தன் வழிபட்டு, அவனுக்கு அருள் பாலித்ததால் கோகிலேஸ்வரர் என்று இறைவனுடைய பெயர்.
திருச்சிற்றம்பலம்.