அருள்மிகு உமையபார்வதி உடனுறை ஆதிமூலநாதர்
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்
மரம்: தில்லை, கற்பக மரம்
குளம்: சிவகங்கைக் குளம்
கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும். அதனால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.
இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:
(1) பெரும்பற்றப் புலியூர்:
(2) சிதம்பரம்: (சித் + அம்பரம்) சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி.
(3) தில்லைவனம்
வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சூதர் முதலான முனிவர்களும், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கூற்றுவர், கணம் புல்லர், கோச்செங்கட் சோழர், மாணிக்கவாசகர், சேக்கிழார் என்னும் நாயன்மார்களும், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் சந்தான குரவர்களும், இரணியவர்மர், சேந்தனார், பெற்றான் சாம்பானார், என்னும் அடியார்களும் வழிபட்டு, முத்திபெற்ற தலம்.
கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள் தமிழிலும், சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் இருக்கின்றன.
குமரகுருபர அடிகளால் ஆக்கப்பெற்ற சிதம்பரம் மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை; இரட்டைப் புலவர்களால் பாடப்பெற்ற தில்லைக்கலம்பகம் என்னும் நூல்களும் இத்தலத்திற்கு உரியன.
கோயிலிலுள்ள ஐந்து சபைகள்:
பேரம்பலம்
சிற்றம்பலம்
கனகசபை
நிருத்தசபை
இராஜசபை