திருக்கோடிகா - (திருக்கோடிகாவல்) இறைவர்: கோடீஸ்வரர், கோடிநாதர்.
இறைவியார்: திரிபுரசுந்தரி,வடிவாம்பிகை.
தல மரம்: பிரம்பு
தீர்த்தம் : சிருங்க தீர்த்தம்.
தற்போது வழக்கில் இத்தலம் திருக்கோடிகாவல் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன்பேட்டை நிலையத்திலிருந்து வடக்கே 2-கி.மீ.; மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து பாதையில் இத்தலம் உள்ளது.
மூன்று கோடி ரிஷிகள், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர் இத்தலத்தை வழிபட்டுள்ளனர். மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது. சிருங்க தீர்த்தம் நந்தியின் கொம்புகளால் ஏற்பட்டது. எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளன.
காவேரி நதி உத்தரவாஹினியாகத் தெற்கிலிருந்து வடக்காகப் பாய்கிறது. சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில், மேலும், சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.
பரசுராமருக்கு ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம், ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு ஏற்பட்ட தோஷம், தட்சயாகத்தில் பலரைக் கொன்றதால் வீரபத்திரருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், காளிக்கு ஏற்பட்ட மஹாஹத்யா தோஷம் ஆகிய தோஷங்களை நிவர்த்தி செய்த மஹா புண்ணியமான தலம் இது. திருமால் இத்தலத்தில் உள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடித் தவமிருந்து மூன்று கோடி தேவதைகளுக்கு முக்தியை வேண்டினார்; அனைவருக்கும் முக்தி கிடைத்த தலம் இது
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடியுள்ளனர். ஆனி 19, 20, 21 ஆகிய நாட்களில் சூரிய ஒளி இறைவன் திருமேனி மேல் படுவது சிறப்பு.
ஸ்ரீபாஸ்கரராயர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு அம்பாள் சன்னதியிலேயே உரை எழுதியதாக வரலாறு. சிவபெருமானின் 64 லீலைகள் சிற்பங்களில் வடிக்கப் பட்டுள்ளன. பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலக் கல்வெட்டுகள் ஏறத்தாழ 50 உள்ளன.