கொடுங்களூர் பகவதி அம்மன். இது கேரள மாநிலத்திலே திருச்சூர் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கு தை மாதம் 1 முதல் 4-ம் தேதி வரை தாழப்புலி என்ற உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோவில் மிகவும் புராதனமான கோவில். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோவில் இருந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
பகவதி அம்மனை இந்த ஊரின் தாயாக நம்புகிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிரமாக இருந்துள்ளார். அப்போது உயிர்பலி, கள் நைவேத்தியம் ஆகியவை நடந்துள்ளன. அதற்குப் பிறகு ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து, உக்கிரமான தேவியை, சாந்தி ஸ்வரூபியாக மாற்றினார்.
பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பது போலவே இருக்கும். பலிக்குப் பதிலாக குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்குப் பதில் இளநீரும், மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் இப்பொழுது நடைபெறுகிறது.
கொடுங்களூர் மிகவும் பாரம்பரியம் மிக்கது. கடற்கரை துறைமுக அமைப்பில் இருப்பதால் இங்கு பல வெளிநாட்டு வாணிபங்கள் 2100 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்ததாகச் செய்திகள் உள்ளன. இங்கிருந்து மிளகு ஏற்றுமதி ஆனதும் தெரியவருகிறது.
மதுரையை எரித்த பிறகு ருத்ரகோலத்தில் கண்ணகி இந்தக் கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி, தவத்தில் ஈடுபட்டிருந்ததாக ஒரு நம்பிக்கை. கொடுங்களூர் பகவதியம்மன் கோவில் உலகத்தில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவில்களிலேயே மிகவும் உக்கிரமான ரூபங்களில் இருக்கும் இடமாகச் சொல்லப்படுகிறது.
எட்டு கை, பெரியகண், எதிரியை அழிக்கும் கோபமுகம், 6 அடி உயரம் இவற்றுடன் தலையிலே கிரீடத்துடன் இங்கு மகாராணியைப் போல் பகவதியம்மன் உக்கிரமாக அருள்பாலிக்கிறாள்.
அம்மனுடைய விக்ரஹம் பலாமரத்தினால் செய்யப்பட்டது. இதனை வரிக்கபிலாவு என்கிறார்கள். அம்மனுக்கு சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறுகிறது.
அம்மனுடைய கர்ப்பக்கிரஹத்திற்கு அருகே ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாகக் கருதி இதற்கும் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. சிவனுக்குத் தனி சன்னிதி இருந்தாலும் இங்கு பகவதியம்மனே பிரசித்தம். கோவில் முழுவதும் செப்புத்தகடு வேயப்பட்டுள்ளது.
ஓம் சக்தி.