பெயர்: திருக்கவித்தலம்
மூலவர்: கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள் கண்ணன்)
தாயார்: ரமாமணி வல்லி பொற்றாமரையாள்
தல விருட்சம்: மகிழம்பூ
தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்
பூஜை: வைகானஸ ஆகமம்
மாவட்டம்: தஞ்சாவூர்
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. திருவையாறு செல்லும் வழியில் கபிஸ்தலம் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம்: பாபநாசம்.
திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ள தலம். 9 வது திவ்ய தேசம். சோழர்களால் கட்டப்பட்ட கோயில். இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி உள்ளார். மூலவர் சன்னதியின் மேல் விமானம் ககனாக்ருத விமானம் ஆகும். கஜேந்திரன் யானை, கூஹு முதலை, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோருக்கு இறைவனின் தரிசனம் கிடைத்தது.
கபி என்றால் வடமொழியில் யானை. யானைக்கு அருளிய தலம் என்பதால் கபிஸ்தலம். கவி என்றால் தமிழில் குரங்கு. ஆஞ்சனேயர்க்கு அருளியதால் கவித்தலம்.
இந்திராஜும்னன் என்ற மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். எப்போதும் விஷ்ணு தியானத்திலேயே இருப்பான். விஷ்ணுவைக் கும்பிடாமல் ஒரு வேலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன், தன்னை மறந்து விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைப் பார்க்க வந்தார். அவர் வந்து வெகு நேரம் ஆனாலும், மன்னன் தன் பக்தி நிலையை விட்டு வெளிவரவில்லை. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. பொறுத்துப் பார்த்த துர்வாசர், உள்ளே சென்று அவன் முன்னால் போய் நின்றார். அப்போதும் அவர் வந்திருப்பதை அறியாமல், பக்தியில் மூழ்கியிருந்தான். முனிவர் கடும் கோபம் அடைந்து, "மன்னா! நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாகப் போவாய்" என்று சாபம் அளித்தார்.
மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும் பாவி விமோசனமும் அருளுக என்று கேட்டான். முனிவரும் அவன் மீது கருணை கொண்டு, நீ யானையாக இருந்தாலும் விஷ்ணு மீது பக்தி கொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய் என்றார். ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலைப் பிடிக்கும்; அப்போது மகாவிஷ்ணுவை நீ அழைத்தால் அவர் உன்னைக் காப்பாற்றுவார்; உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.
கூஹு என்னும் அரக்கன் ஒரு குளத்தில் வாழ்ந்து வந்தான். அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து அவர்களைத் துன்பம் செய்வதையே பலகாலம் செய்து கொண்டிருந்தான். அகத்திய மாமுனிவர் தென் திசை நோக்கி வந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் முன்பு, அந்தக் குளத்தில் நீராடினார். அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். அகத்தியர் "நீ வருபவர் காலைப்பிடித்து இழுப்பதால் முதலையாகப் போவாய்" என்று சபித்தார். அரக்கன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியரும், கஜேந்திரன் என்ற யானை இந்தக் குளத்திற்கு வரும் போது, நீ அதன் காலைப்பிடிப்பாய்; அப்போது அந்த யானையைக் காப்பாற்ற விஷ்ணு வருவார். அவரது சக்ராயுதத்தால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
கோயில் முன்பு கிழக்கில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் தண்ணீர் குடிக்க இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைப் பிடித்தது. ஆதிமூலமே! என்று யானை கத்தியவுடன், கருட வாகனத்தில், மஹாவிஷ்ணு வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்துக் கஜேந்திரனுக்கு மோட்சமளித்தார்.
ஆடிப் பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.
இந்தப் பெருமாளை ஆழ்வார் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்று பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு நிலைத்து விட்டது.