அருள்மிகு சர்வாங்க நாயகி உடனுறை சற்குணநாயகர்.
கருவிலி (கருவேலி), திருவாரூர் மாவட்டம்.
தல மரம்: வில்வம்
தீர்த்தம்: எம தீர்த்தம்
ஊர்ப் பெயர் - கருவிலி; கோயில் பெயர் - கொட்டிட்டை. தற்போது மக்கள் கருவேலி என்று வழங்குகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நாச்சியார் கோயிலுக்குக் கிழக்கே ஒன்பது கி. மீ. தொலைவில் உள்ள தலம். சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பேறு பெற்ற இடம். இந்திரனும் தேவர்களும் வழிபட்ட தலமும் ஆகும்.
இத்தலத்து இறைவனைத் தரிசித்து வழிபட்டால், இனி வரும் பிறப்புகள் இல்லை. கரு + இலி, இனிமேல் கருவில் வாசம் செய்ய வேண்டிய அவசியம், அதாவது பிறப்பு, கிடையாது. அத்தகைய பெரும் பேறு அளிக்கும் தலம். அம்மனின் திருவுருவம் உயரமான அழகிய திருவுருவம்.
இரண்டாம் இராஜாதிராஜன் காலத்துக் கல்வெட்டு, இவ்வூரை உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்கசோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிப்பிடுகிறது. வழிபட்டோர்: அப்பர், சேக்கிழார், இந்திரன், உருத்திரகணத்தர் ஆகியோர். சோழர்களின் திருப்பணி பெற்றத் தலம்.
பூந்தோட்டத்திலிருந்து நாச்சியார்கோயில் செல்லும் பேருந்து சாலையில் கூந்தலூரையடைந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சென்றால் இத்தலத்தையடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி. மீ. தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது.
அஞ்சல் எண்: 609501