கண்டியூர் ஹர சாப விமோசனப் பெருமாள். உற்சவர் கமலநாதர். தாயார் கமலவல்லி நாச்சியார். கபால மோட்ச புஷ்கரணி தீர்த்தம். வைகானஸ வழியிலே பூஜை நடைபெறுகிறது. இதன் புராணப்பெயர் கண்டன க்ஷேத்ரம், பஞ்ச கமல க்ஷேத்ரம்.
தஞ்சாவூர் மாவட்டத்திலே அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸ்தலம் ஆகும். இந்த ஊரினுடைய PINCODE – 613202.
இறைவன் கிழக்குப் பார்த்த நின்ற திருக்கோலம். சன்னிதியின் மேலுள்ள விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. சிவனின் சாபம் தீர்ந்த இடம் ஆதலால், ஹர சாப விமோசனப் பெருமாள் என்று அழைக்கப் படுகின்றார்.
இந்தக் கோவிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்தத் தலம் ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும். கண்டீஸ்வரர் என்ற பெயரிலே சிவபெருமான் கோவிலும் இந்தத் தலத்திலே இருக்கின்றது. ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தவர்.
சிவனுக்கு 5 முகங்கள் உண்டு. அதேபோல் பிரம்மாவிற்கும் 5 முகங்கள் இருந்த காலம். அப்போது சிவனுக்கு ஈடாகத் தன்னையும் நினைத்து பிரம்மா கர்வமாக இருந்தபோது, சிவன் கோபம்கொண்டு, பிரம்மாவினுடைய நடுத்தலையைக் கிள்ளிவிட்டார். அதை வெட்டியதால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்தக் கையிலேயே பிரம்மாவினுடைய கபாலமும் ஒட்டிக் கொண்டுவிட்டது. இந்தத் தலத்திற்கு வந்தபோது, அந்த கபாலம் கீழே விழுந்தது. இந்த ஸ்தலம் தான் ஹரனுடைய சாபத்தைத் தீர்த்த ஸ்தலம் ஆதலால், ஹர சாப விமோசன பெருமாள் என்ற் பெயர் பெற்றது.
நாராயண நாராயண.