காமாக்யாதேவி. கவுஹாத்தியில் உள்ளது. கவுகாத்தி மாவட்டம் அசாம் மாநிலம். இங்குள்ள தீர்த்தம் பிரம்மபுத்திரா. இது சக்தி பீடங்கள் 51-ல் ஒன்றாகும். இதை காமரூ என்றும் சொல்வார்கள். சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம்.
கவுஹாத்தியில் தாரா, பைரவி, புவனேஸ்வரி ஆகியோர்களுக்குக் கோவில்கள் உள்ளன. பக்கத்தில் ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோவில் உள்ளது. நரகாசுரனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனுக்கு அஷ்வக்ரந்தா என்ற இடத்தில் கோவில் உள்ளது. அசாம் தலைநகர் கவுஹாத்தியில் இருந்து 12 கி.மீ தொலைவிலே நீலாஞ்சல் என்ற மலை உள்ளது. அந்த மலைமீது காமாக்யாதேவி கோவில் அமைந்துள்ளது. புராணங்களிலே இது நரகாசுரனால் ஆளப்பட்ட இடமாகக் கருதப்படுகின்றது.
10-ம் நூற்றாண்டிலே இந்தக் கோவில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
உள்ளே குகை இருக்கின்றது. இந்த குகைக்குக் கீழே படிக்கட்டுகள் இருக்கின்றன. அங்கே மின்விளக்குகள் கிடையாது. கீழே சென்றால் பாதாளத்திலே கருவறை உள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே உள்ளது. அந்த வெளிச்சத்தில் தான் பூஜை நடக்கிறது.
சிறிய மலைப்பாறை போன்ற அமைப்பு கருவறையில் உள்ளது. இதை மேரு என்று சொல்கிறார்கள்.
மேடையைச் சுற்றி தண்ணீர் வலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியிலே யோனி பீடம் அமைந்திருக்கின்றது. இங்கு இன்றும் கருவறையிலே உயிர்பலி கொடுக்கும் வழக்கம் நடைப்பெற்று வருகிறது. மேடையின் கீழே ஓடும் தண்ணீரை சௌபாக்யகுண்ட் என்று அழைக்கிறார்கள். அங்கிருந்து வெளியேரும் தண்ணீர் உலோகங்களால் செய்யப்பட்ட காமேஸ்வரர், காமேஸ்வரி விக்ரகங்கள் மேல் படுவதாக பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
இங்கு சிவனுடைய தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த காமதகனம் நடந்ததாக புராணக்கதை உள்ளது. அதன்படி உமாநந்த சிவா கோவிலும் ஒன்று இங்கு இருக்கின்றது. அருகிலிருக்கும் அனுமன் கோவிலுக்கும் செல்லவேண்டும். அதற்கு பிறகுதான் காமாக்யா கோவிலுக்குப் பக்தர்கள் செல்லுமாறு அமைத்திருக்கிறார்கள். இந்த மலையிலே இருக்கின்ற சுயம்பு யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அங்குள்ள ஊற்று நீரே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
வசந்த காலத்தின்போது தண்ணீர் செந்நீராக வருகிறது. அந்த 3 நாட்கள் கோவிலை மூடி விடுகிறார்கள். அந்த 3 நாட்கள் இங்கு வழிபாடு கிடையாது. முற்காலத்திலே இந்தப் பகுதி காம ரூபம், ஹரிக்ஷேத்ரம், பிரக்ஜோதிஷபுரம் என்ற பெயர்களிலே இருந்தது.
இரண்யாட்சகன் பூமியை அபகரித்துச் சென்று பாதாளத்திலே ஒளித்து வைத்த போது, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமாதேவியை மீட்டு வந்தார். அப்போது வராக வடிவ விஷ்ணுவிற்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே நரகாசுரன் ஆவான்.
பிறகு கிருஷ்ணாவதாரத்திலே நரகாசுரனுடன் போர் புரிந்தபோது, விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. ஏனென்றால், பூமாதேவி தன் கையினால்தான் அவனுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கி இருந்தாள். கிருஷ்ணனை நரகாசுரன் தவறாகப் பேசியபோது, சத்தியபாமா தன்னுடைய வில்லை எடுத்து, அம்பு தொடுத்து நரகாசுரனை அழித்தாள். இந்த இடத்தில்தான் அந்த சம்பவம் நடந்ததாக புராணக்கதை உள்ளது.
இந்த ஊரினுடைய PINCODE – 781010.
STD CODE – 0361.
ஓம் சக்தி.