ஜ்வாலாமுகி அம்மன். ஊர் ஜ்வாலாமுகி, காங்கரா மாவட்டம், ஹிமாசலப்பிரதேசம். இது 51 சக்தி பீடங்களில் ஒன்று. அம்மனின் அன்னையினுடைய நாக்கு விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
இங்கு இருக்கின்ற தீச்சுடர், எண்ணெய் இல்லாமல் திரி இல்லாமல் பழமையான பாறை இடுக்குக்குகளிலிருந்து, நீலநிறத்தில் ஜ்வாலைகளாகத் தீப்பிழம்பாக, அன்னையின் வடிவமாக வழிபடப் படுகின்றது. இங்கே துர்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது.
இந்த ஜ்வாலைகளில் சரஸ்வதி, லட்சுமி, அன்னபூர்ணி முதலிய எட்டு பெயர்களில் ஜ்வாலைகள் வணங்கப்படுகின்றன. அன்னை ஆதிபராசக்தி பல்வேறு வடிவங்களில் உலகெங்கிலும் கோவில் கொண்டு, அருள்பாலித்து வருகிறாள். ஜ்வாலாமுகி 9-வது சக்திபீடம். ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அன்னை, இங்கு தீச்சுடராகத் திகழ்கிறாள். எப்படி திருவண்ணாமலையில் சிவன் தீச்சுடராக இருக்கின்றாரோ, அந்த மாதிரி ஜ்வாலாமுகியில் தீச்சுடராக அன்னை விளங்குகிறாள்.
இயற்கையாகவே பாறைகளில் இடுக்கில் இருந்து வருகின்ற ஒரு வாயுவின் மூலமாக இந்தத் தீ அணையாமல், பல ஆயிரக்கணக்கான காலங்களாக ஜொலிக்கிறது.
இந்த ஜ்வாலைகளில் பிரதானமாக காளிதேவி, துர்காதேவி வணங்கப்படுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து கொண்டிருகின்ற ஜ்வாலைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தும், இதனுடைய உண்மைத் தத்துவம் வெளிப்படவில்லை. வெகுகாலத்துக்கு முன்பு பூமிசந்த் என்ற மன்னன் காங்கராவைத் தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். சிறந்த தேவி பக்தன். அவனுடைய கனவிலே அன்னை சுடர் வடிவில் கோவில் கொண்டிருக்கின்ற இடத்தை உணர்த்தினாள். அந்த இடத்தைக் கண்டுபிடித்த மன்னன் ஆலயம் எழுப்பினான்.
நேபாள அரசன் ஹங் என்பவன் மண்டபம் அமைத்து வெண்கல மணியையும் வழங்கினான். கஜினி முகம்மதால் இவ்வாலயம் கொள்ளையிடப் பட்டதாகவும் செவிவழிச் செய்தி உள்ளது. இந்த ஜ்வாலையை பல அந்நியர்கள் அணைக்க முயன்றும் அணைக்க முடியவில்லை பஞ்சாப் மன்னன் ரஞ்சித்சிங் இங்கு வருகை புரிந்து ஆலயத்தைச் சீரமைத்து, கோபுரத்துக்குத் தங்கக் கவசத்தையும் வெள்ளியால் ஆன கதவையும் அமைத்தான்.
பின்கோடு 176 031.
ஒம் சக்தி.