மூலவர்: எழுத்தறிநாதர்
அம்மன்: நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்
தல விருட்சம்: செண்பகமரம், பலா
தீர்த்தம்: ஐராவத தீர்த்தம்
தஞ்சாவூர் மாவட்டம்
திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம். காவிரி வடகரைத்தலங்களில் இது 45 வது தலம். லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் மட்டும் விழுவது சிறப்பு. இறைவன் சுயம்பு மூர்த்தி. கல்வி அபிவிருத்தியை தரும் இந்த ஸ்தலம் சோழர்களால் கட்டப்பட்டது.
சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் என்பவர், ஒருமுறை காட்டிய கணக்கில் மன்னனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சரியான கணக்கைக் காட்டியும் பழி வந்துவிட்டதே என நினைத்த அவர் சிவனை வேண்டினார். சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று சந்தேகத்தைப் போக்கினார். உண்மையான சுதன்மன் சற்றுநேரம் கழித்து மன்னனிடம் கணக்குடன் சென்றான். மீண்டும் ஏன் கணக்குக் காட்ட வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டான். இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் சொன்னவுடன், மன்னன் சுதன்மனிடம் மன்னிப்புக் கேட்டு, சுவாமிக்குக் கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
சுயம்புலிங்கம் என்பதால் தான்தோன்றீயீசர் என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். சூரியனுக்கு இனன் என்ற பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்று ஆகி, பின்னர் இன்னம்பூர் என்று மாறிவிட்டது.
நவராத்திரி, சித்திரை கோடாபிஷேகம், ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை விசேஷம்.
இன்னம்பூர் - 612 303