அருணகிரிநாதரை முருகன், "வயலூருக்கு வா!' என்று அழைத்தான். அங்கே பொய்யாக் கணபதியின் அருளால் திருப்புகழைப் பாடும் முறை உபதேசம் ஆனது. அங்கிருந்து பல தலங்களையும் தரிசித்துச் செல்லும் போது, அருட்செயல்கள் பல புரிந்து அவரை ஞான மலைக்கு அழைத்தார் முருகன்.ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்கு முருகனின் திருப்பாதத்தை மீண்டும் தரிசிக்க விருப்பம் ஏற்பட்டது.
ஞானமலையில் ஒரு பாடலைப் பாடினார். ஞானமலையில் மீண்டும் திருவடிக்காட்சி நல்கி, அவருக்கு யோகாநுபூதியை அளித்தார் முருகப்பெருமான்.
ஞானமலை எங்கே இருக்கிறது என்பது 1998-ம் ஆண்டு வெளிவந்த செய்தி ஒன்றில், "காளிங்கராயன் என்பவன் ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்' என்று, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றினால் தெளிவாகியது. காளிங்கராயன் (1322-1340) சம்புராயர் காலத்தில், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியின் அதிகாரி. இக்கல்வெட்டு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள மலைமேல் ஒரு சுனைக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைக்கு அருகிலேயே நாம் கோவிலைக் காணமுடியும். ஆம்பூரில் இருந்து அருகிலேயே உள்ளது.
ஞானமலை அடிவாரத்தில் ஞானசக்தி கணபதி அருள்பாலிக்கிறார். 150 படிகள் ஏறி ஞானபண்டித சுவாமி திருக்கோயிலை அடையலாம்.. அழகிய சிறிய கோவில். கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி காட்சி அளிக்கிறார். ஒருமுகம், நான்கு கரங்கள், பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை, முன்வலக்கரத்தில் அபயமுத்திரை, முன் இடக்கரம் இடுப்பில் - இப்படி நின்ற கோலத்தில் கந்தப்பெருமான், "பிரும்மசாஸ்தா வடிவத்தில்' காட்சி அளிக்கிறார். இவ்வடிவம், பல்லவர் காலத்தது. இது 1300 ஆண்டுகள் முற்பட்டது என்பதை இதன் சிற்ப முறை கொண்டு அறியலாம்.
மலையின் மேற்புறம் ஏறிச்செல்லும் வழியில், "வேற்சுனை' உள்ளது. மலைமீது ஏறிச் சென்றால் அங்கே ஞானப்பூங்கோதையுடன் ஞானகிரீச்வரர் காட்சியளிக்கிறார். இவர் அருணகிரிநாதரைக் குருவாகக் கொண்டு வாழ்ந்தவர், ஞானவெளிச்சித்தர், பாலைச் சித்தர் என்றும் கூறுவர். ஞானமலையில் பல்லாண்டுகள் அவர் தவம் செய்தார். மக்களின் உடற்குறைகளை நீக்கி, வியாதிகளுக்கு மருந்தளித்தார்; ஞானத்தைப் போதித்தார். அவர் ஞானசமாதி கொண்டுள்ள இடத்தில்தான் ஞானகிரீச்வரப் பெருமான் லிங்க வடிவில் உள்ளார். இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலைச் சித்தருக்குப் பிறகு மற்றொரு சித்தர் இங்கு இருந்தார். அவரது சமாதி, மலை அடிவாரத்தில் உள்ளது.
ஞானகிரீச்வரர் கோயிலின் பின்புறம் ஞான பண்டித சுவாமியின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடம் உள்ளது. "ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் ஒரு பொருள் உண்டு. இம்மலையில் அதிகம் காணப்படும் வெப்பாலை என்னும் குடசப்பாலை மரம், அரிய மூலிகை மரம் என்று கூறுவர்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா.
முருகா சரணம்.
PIN Code: 635812
STD Code:
Click here for map (வரைபடம்-வழி)
SEO tags: gnanamalai, vellore, murugan, hill