எட்டுக்குடி முருகன். தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் சரவணப்பொய்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.
முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். மூவரும் அமர்ந்துள்ள பெரிய மயில் சிற்பத்திற்குத் தரையிலே இருக்கின்ற ஆதாரம் அதனுடைய 2 கால்கள் மட்டுமே.
இங்கு சித்ரா பௌர்ணமி திருவிழா மிகவும் விஷேசம். பல ஆயிரக்கணக்கான பால்குடங்கள், பால் காவடிகள் இங்கு வந்தபடியே இருக்கும். ஐப்பசி கந்த சஷ்டி விழாவும், வைகாசி விசாக விழாவும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும்.
இந்த ஊரிலே சத்ரு சம்ஹார த்ரிசதி என்ற சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இந்தப் பூஜையை நடத்துவார்கள். ஆறு முகங்களுக்கும் தனித்தனி நைவேத்தியம், அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்படும். கந்தசஷ்டி விரதமும், கௌரி விரதமும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது, இந்த ஊரினுடைய சிறப்பு. வான்மீகர் என்ற சித்தர் சமாதியும் இங்கு உள்ளது. கோவிலுக்குள் உள்ள வன்னி மரத்தடியில் இவருடைய சமாதி இருக்கின்றது.
சுப்பிரமணியப் பெருமானுடைய வடிவத்தைக் குழந்தை வடிவிலும், முதியவராகவும், இளைஞனாகவும் நம் மனநிலைக்கேற்பப் பார்த்தால், அதற்கு ஏற்றாற்போல் காட்சி தருகிறார்.
நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்திலே ஒரு தெய்வீகமான சிற்பி இருந்தார். ஆறெழுத்து மந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த சிற்பி, ஆறுமுகம் கொண்ட வேலனுடைய சிலையை வடித்தார். சோழ மன்னன் அதனுடைய அழகைப் பார்த்து, இதைப் போல இன்னொரு சிலையைச் செய்யக்கூடாது என்று, சிற்பியினுடைய கட்டை விரலை வெட்டிவிட்டார். இருந்தாலும் தன்னுடைய ஆறெழுத்து மந்திர பக்தியினாலே, விரல் இல்லாதபோதும் கடுமையான முயற்சி செய்து, மற்றொரு சிலையும் செய்தார். அதை அந்த ஊரிலே இருந்த மன்னர் முத்தரசன் பார்த்து, அந்தச் சிலையிலிருந்து வரும் ஒளியைப் பார்த்து, அந்த சிலைக்கு உயிர் வந்துவிட்டது என்று நினைத்தான். நிஜமாகவே அந்த சிலைக்கு உயிர் வந்துவிட்டது.
முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்த நேரத்தில் அதை எட்டிப்பிடி, எட்டிப்பிடி என்று சொன்னான். மயிலைப் பிடித்தனர். மயில் அங்கேயே சிலையாக நின்றுவிட்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தையே எட்டிக்குடி என்று மாறி தற்போது எட்டுக்குடி என்றானதாக ஊரினுடைய பெயர் வரலாறு சொல்கிறது.
சிற்பி இன்னொரு சிலையை செய்தார்; எண்கன் என்னும் தலத்திலே இருக்கிறது.
சிற்பியினுடைய முதல் சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும், அடுத்த சிலை எண்கண்ணிலும் உள்ளன.
இந்த மூன்றுமே ஒரே வடிவமாக அமைந்தவை. அருணகிரி நாதர் பாடியிருக்கிறார். எட்டிக்குடி என்பதில், எட்டி மரம் என்பதைக் காஞ்சிரங்காய் என்று சொல்வார்கள். அதனால் காஞ்சிரங்குடி என்று பாடியிருக்கிறார்.
PINCODE – 610 212.
STDCODE – 04366.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.