ஏரிகாத்த ராமர். மதுராந்தகம். காஞ்சிபுரம் மாவட்டம். கருணாகரப் பெருமாள், பெரிய பெருமாள். தாயார் ஜனகவல்லி. இந்தக் கோவிலிலே சீதையினுடைய கைகளைப் பற்றிய நிலையில் ராமர் காட்சி தருகிறார். ஜனகவல்லி தாயாருக்குத் தனி சன்னிதி இருக்கின்றது.
இங்கே பஞ்ச அலங்காரம் என்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ராமநவமி விழாவிலே முதலில் காலையிலே பஞ்சகச்ச அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையிலே புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவிலே முத்துக்கொண்டை, திருவாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரம் என்று ஒரே நாளிலே சுவாமிக்கு 5 வித அலங்காரங்கள் நடக்கின்றன.
இலங்கை செல்லும் போது ராமபிரான் விபண்டக மகரிஷியின் ஆசரமத்திலே தங்கி, அந்த உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மகரிஷி வேண்டுதலின் படி அயோத்திக்குத் திரும்பும் வழியிலே, சீதையுடன் இங்கு கல்யாண கோலத்திலே காட்சி தந்தார். அந்த அடிப்படையில்தான் இந்தக் கோவிலிலே புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
இராமனுஜர் பொதுவாக காவி வஸ்திரத்திலே இருக்கும் கோலத்தைக் காண்போம். இங்கு வெண்ணிற வஸ்திரத்துடன் காட்சி தருகிறார்.ராமானுஜருக்கு அவருடைய குரு, பெரியநம்பி தீக்ஷை கொடுத்தார். இந்த இடத்திலே பஞ்ச சம்ஸ்காரம் செய்து தீக்ஷை ஏற்கும் போது, கிரகஸ்தராக (இல்லற வாசியாக) அப்போது ராமானுஜர் இருந்ததால் வெள்ளை வஸ்திரத்திலே காட்சியளிக்கிறார்.
இராமனுஜருக்கு தீக்ஷை கொடுக்கும்போது அவருடைய கைகளிலே சங்கு சக்கர முத்திரைகளைப் பதிப்பார்கள். அப்போதுப் பதித்த அந்த சங்கு சக்கர முத்திரைகள், இந்தக் கோவிலிலே இன்னமும் இருக்கின்றன. இதுவும் அபூர்வமான ஒரு விஷயமாகும்.
இந்தக் கோவிலுக்குப் பின்புறத்திலே ஒரு ஏரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏரி நிறைந்து கரையிலே பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் உடைப்பு ஏற்பட்டது. அப்போது இருந்த ஆங்கில கலெக்டர் துரை பல முயற்சி எடுத்தும் பலனில்லை. ஒருநாள் கோவிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னிதி திருப்பணி செய்ய வேண்டும் என்று துரையைக் கேட்டார்கள். அவர்களும் உங்கள் தெய்வத்திற்குச் சக்தி இருந்தால், இந்த வருடம் ஏரி உடைப்பு எடுக்காமல் இருக்கவேண்டும் என்றார்.
மழைக்காலம் வந்தது. ஏரி நிறைந்தது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலை. அப்போது வெள்ளைக்கார துரை ஏரியைப் பார்வையிடச் சென்றார். ஏரி உடையும் நிலையில் இருந்தது.
ஆனால் ஒரு மின்னல் மின்னும்போது, இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லிலே அம்பு பூட்டி, காவல் காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதற்கு பிறகு அந்த இளைஞர்கள் அங்குக் காணவில்லை. ஏரியும் உடையவில்லை.
வெள்ளைக்கார துரையே (பிளேஸ் என்றுபெயர்) ராமரும், லக்ஷ்மணரும் இளைஞர்களாக வந்து காட்சி கொடுத்ததால், தாயார் சன்னிதியைக் கட்டிக் கொடுத்தார். இந்த சம்பவத்தினுடைய கல்வெட்டு இங்கே உள்ளது.
கம்பராமயாணம் எழுதிய கம்பர் அதை அரங்கேற்றுவதற்கு முன்பாக, பல ராமர் தலங்களுக்கும் சென்றார். அவர் இங்கு வந்தபோது ஒரு சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. அந்த இடத்திலே நரசிம்மர் லக்ஷ்மியுடன் காட்சி தருவதைக் கண்டார். பிற்காலத்திலே அது சிங்கமுகம் இல்லாமல், மனித முகத்துடன் சாந்த நரசிம்மராக இருந்தது. பிரகலாதவரதன் என்று சொல்கிறார்கள்.
இராமர் இருந்தாலும் இந்தத் தலத்திலே கருணாகரமூர்த்தியே பிராதான மூர்த்தியாக அருளுகிறார். இங்கு யந்திரத்திலே சக்கராத்தாழ்வார் இருக்கின்றார். இங்கு பிரம்மோற்சவத்திலே 2 தேர்கள் இருக்கும்.ஒரு தேரிலே ராமரும், ஒரு தேரிலே கருணாகரப் பெருமாளும், ஒரே விழாவிலே 2 தேரிலே வருவார்கள்.
இந்தஊரினுடைய PINCODE – 603306.
ஜெய் ஸ்ரீராம்.