சோட்டானிக்கரை. இது கேரளா மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவி பகவதி அம்மன்.
இங்கு பகவதி அம்மன் காலையிலே வெண்ணிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சி வேளையிலே சிவப்பு ஆடையில் லக்ஷ்மியாகவும், மாலையிலே நீல நிற ஆடையில் துர்க்கையாகவும் அருள் பாலிக்கிறார்.
எல்லாப் பாவங்களிலும் இருந்து காப்பவள் என்பதால், வலது கையைப் பாதத்தில் காட்டி, இடது கையால் அருள் பாலிப்பது சிறப்பு. இங்கு 3 1/2 அடி உயரம் கொண்ட பகவதி அம்மனுடைய சிலை ருத்ராட்சத்தால் செய்யப்பட்டதாக நம்பிக்கை. இங்கு அதிகாலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தங்க அங்கி அணிவிக்கப்படும்.
தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால், அம்மே நாராயணா, தேவி நாராயணா, லக்ஷ்மி நாராயணா, பத்ரி நாராயணா என்று பாடப்படுகிறார்.
உச்சி கால பூஜைக்கு 2 மணிக்கு நடை திறக்கும். அப்போது சர்வாலங்கார விபூஷிணியாகத் தேவி காட்சி தருவார். திருவாபரணம் முடிந்து தங்கமாக ஜொலிக்கும், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவருக்கும், மனநோய் உள்ளவர்களுக்கும் இந்தத் தலத்தில் நிம்மதி கிடைக்கிறது. இந்தத் தலத்திலே உள்ள ஒரு பலாமரத்தில் 5 இலைகளுடன் கூடிய இலை இருக்கிறது. இது ஒரு விஷேமாகும்.
பண்டைக்காலத்திலே இந்த சோட்டானிக்கரை ஒரு பெரிய காடாக இருந்தது. அப்போது அதனுடைய தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கினார். இவர் கண்ணப்ப நாயனார் இல்லை. இவர் வேறு ஒருவர். கொடூரனாக இருந்ததால் பசுமாட்டை எல்லாம் வேட்டையாடி, இறைச்சியாக்கிச் சாப்பிட்டான். இந்தக் கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். வழக்கம் போல் ஒருநாள் பசுவைக் கொல்ல முயன்ற போது, அந்த பசு காட்டிற்குள் ஓடிவிட்டது.
பல இடங்களில் ஓடிய பிறகு கடைசியிலே ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது. ஆனால், அந்த பசுவுக்கு பக்கத்திலே தன் மகளும் இருப்பதைக் கண்டான். பசுவை வெட்ட அரிவாளை ஓங்கினான், மகள் குறுக்கிட்டு, பசு எனக்குச் சொந்தமானது வெட்டாதே! என்று காலில் விழுந்தாள். மகள் மீது இருந்த பாசத்தால் கண்ணப்பன் அந்தப் பசுவைக் கொல்லாமல் விட்டுவிட்டான். அன்று முதல் அவன் இறைச்சி சாப்பிடவில்லை. ஒருநாள் அவனுடைய மகள் இறந்து விட்டாள். வாழ்க்கையிலே வெறுப்பு வந்துவிட்டது.
கண்ணப்பனுடைய கனவிலே அந்தப் பசு தோன்றி, நான்தான் ஸாக்ஷாத் ஜெகதம்மாள் தேவி. நான் ஒரு இடத்தில் சிலையாக நிற்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் என்று கூறி மறைந்தாள்.
அடுத்த நாள் அந்த மாட்டுத் தொழுவத்தை காவாக மாற்றினான். தொழுவத்தில் (காவு என்று சொல்லுவார்கள்) மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம் உள்ளது. ஆனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறிவிட்டது. ஒரு பெண் ஒருநாள் புல் வெட்டிக் கொண்டிருந்தாள். அவளது அரிவாள் விக்ரகத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது. பிறகு எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விளக்கு ஏற்றி பூஜை பார்த்தபோது, அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதாக உணர்ந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதியாக அருள் பாலிக்கிறாள்.
ஆதி சங்கரர் சம்பந்தமான ஒரு கதையும் உண்டு. சரஸ்வதி தேவியின் அருளால் ஜகத்குரு பகவத் பாதாள் மைசூரில் இருக்கிற சாமூண்டிஸ்வரியைக், கேரளத்திற்குக் கொண்டு வர விரும்பினார். தவமும் இருந்தார். தவத்திற்கு இரங்கி, தேவி தோன்றி, நீ முன்னே போய்க் கொண்டிரு! நான் பின்னே வருகிறேன் என்று சொன்னாள். ஆனால், ஒரு இடத்தில் சங்கரர் திரும்பிப் பார்த்து விட்டார். தேவியும் அதே இடத்தில் பிரதிஷ்டையாகி விட்டாள். அந்த இடம் கொல்லூர்; மூகாம்பிகை அம்மன் அவளே.
ஆனால், ஆதிசங்கரருக்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் ஆதி சங்கரர் கேராளாவிற்கு வரவேண்டும். என்று சொன்னேனே இங்கே நின்று விட்டாயே தாயே என்று கேட்டவுடன், குமரியிலிருந்து கோகரணம் வரையில் மலை எல்லாமே கேரளம் தானே என்று தேவி கேட்டாள். ஆதி சங்கரருக்குத் திருப்தி இல்லை, மீண்டும் வேண்டினார். கட்டாயம் கேரளத்திற்கு வந்தே தீர வேண்டும் என்று சொன்னார்.
தேவியும், சங்கரா, உன்னுடைய கட்டாய வேண்டுதலினால், தினமும் காலை 3 மணி முதல் 7½ மணி வரை சோட்டானிக்கரையிலே தரிசனம் தருகிறேன் என்று சொல்லி மறைந்தாள்.
சங்கரரும் சோட்டானிக்கரையில் வந்து அம்மையின் திருக்காட்சி கண்டார். ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தில் உள்ள விக்ரகத்தில் ஜோதியில் கலந்து விட்டார். ஜோதியான கரை என்பதுதான், இப்பொழுது சோட்டானிக்கரை என்ற பெயரிலே விளங்குகின்றது. இந்த தலத்திலே மன நோய், மன உளைச்சல்கள், மன அழுத்தம் எல்லாம் தீர்வது நம்பிக்கை.
இந்த ஊரினுடைய PINCODE – 682 312.
STD CODE – 0484
ஓம் சக்தி.