திருஅன்னியூர் (பொன்னூர்)
இறைவர்: ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர்.
இறைவியார்: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தலமரம்: எலுமிச்சை
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம்
திருவாரூர் மாவட்டம்.
திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 62வது தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. இத்தலத்தில் வழிபட்டோர் வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர். மயிலாடுதுறையிலிருந்தும் நீடூரிலிருந்தும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம், பானுக்ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு. ஆதிமூல லிங்கம் அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி பிரகாரத்தில் உள்ளார். வடமொழியில் 'லிகுசாரண்ய மகாத்மியம் ' என்ற பெயரில் தலபுராணம் இருக்கிறது.
சிவபெருமானை மதிக்காமல் மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் அக்னி தேவனும் கலந்து கொண்டான். அக்னி பத்ரகாளியாலும் வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் மற்ற எந்த யாகத்திலும் அவனால் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் இல்லை; மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடின. மனம் வருந்திய அக்னி தேவன் இத்தலம் வந்து வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். வன்னி என்றால் அக்னி. அக்னி தேவன் வழிபட்டதால்அன்னியூர் ஆனது.
பார்வதி தேவி காத்தயாயன முனிவரின் மகளாகப் பிறந்து, இறைவனை அடைய இவ்வூரில் தவமிருந்தாள். இறைவன் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். இது திருமணத்தடை நீக்கும் தலம்.
அன்னியூர் 612 201.