ஊர்: ஆலங்குடி
ஊரின் இயற்பெயர்: இரும்பூளை, திருவிரும்பூளை
மாவட்டம்: திருவாரூர், வலங்கைமான் வட்டம்
மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர் காசி ஆரண்யேஸ்வரர்
உற்சவர்: தட்சிணாமூர்த்தி
அம்மன்: ஏலவார்குழலி
தல விருட்சம்: பூளை என்னும் செடி
தீர்த்தம்: பிரமதீர்த்தம் அமிர்த புஷ்கரணி
காவிரியின் தென்கரைத் தலங்களில் உள்ள பாடல்பெற்ற தலம். திருவாரூர் –மன்னார்குடி ரோட்டில் 30 km தொலைவில் ஆலங்குடி உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் ஆலங்குடிக்கு சாலை வசதி உண்டு. திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக எழுந்தருளி உள்ளார். குருஸ்தலம் ஆகிய இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம். விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் ஆகியோர் இத்தலத்தைப் பூசித்தனர். அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம்.
உள்ளே நுழைந்ததும் உள்ளது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதி;பிறகு குரு சன்னதி.மாதா பிதா குரு என்ற அடிப்படையை இக்கோயில் எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
சுந்தர மூர்த்தி நாயனார் இங்கு வரும்போது வெட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றினார். ஓடம் தடுமாறிப் பாறையில் மோதியது; அப்போது காத்தவிநாயகர் "கலங்காமல் காத்த பிள்ளையார்" என்று போற்றப் படுகிறார்.
கருமை நிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சம் என்பதால் திருஇரும்பூளை என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த சிவனுக்குரிய தலம்; பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு உலகைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதால் ஆலங்குடி என்று பெயர். தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் எழுந்தருளுவது இங்கு மட்டும்தான்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி உள்ள நாளாகும். இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருக்கிறார். இவரையே குருவாகக் கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
நாகதோஷம் நீங்க, பயம்/குழப்பம் நீங்க, இங்குள்ள விநாயகரைப் பிரார்த்தனை செய்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்க குருவைப் பிரார்த்தனை செய்கின்றனர்.
குருபெயர்ச்சி ஆராதனை, சித்திரைப் பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களின் தக்ஷிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
திருவாரூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே இருக்க விருப்பம் இல்லாமல், ஒரு அர்ச்சகரின் உதவியால், மீண்டும் ஆலங்குடிக்கே திரும்பி வந்த சுந்தரர் சிலை உள்ளது. இந்தச் சிலையை ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகரிடம் இது என்ன என்று கேட்டபோது, அம்மை போட்டிருக்கும் என் குழந்தை என்று சொன்னார். ஆலங்குடி வந்து பார்த்த போது சுந்தரர் சிலைக்கே அம்மை போட்டிருந்தது! இப்போதும் அம்மைத் தழும்புகள் சிலையில் உள்ளன.
ஆலங்குடி – 612801